1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (11:49 IST)

குமரி விசிட்டில் ஒரு மீனவ கிராமத்துக்கு கூட செல்லவில்லை: இவரல்லவா முதல்வர்!

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை பார்வையிட சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு 5 மணி நேரம் செலவிட்டு ஒரு மீனவ கிராமத்துக்கு கூட செல்லாமல் தனது பயணத்தை முடித்துக்கொண்டது மீனவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஓகி புயல் வந்து 13 நாட்கள் கழிந்த பின்னர் தான் முதல்வர் அங்கு செல்கிறார் என்பது ஏற்கனவை விமர்சிக்கப்பட்டது. ஆனால் அங்கு சென்றும் கூட அவர் ஒரு மீனவ கிராமத்துக்கு கூட செல்லவில்லை, ஒரு மீனவனை கூட சந்திக்கவில்லை. விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற முதல்வர் அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வந்தார்.
 
மதியம் 2 மணிக்கு குமரி மாவட்டம் வந்த முதல்வர் வெள்ளிமலை பகுதியில் சேதமடைந்த வாழைத் தோட்டத்தை பார்த்துவிட்டு உடனடியாக கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு வந்தார். அங்கு ஒரு சில அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். ஆனால் எந்த மீனவ கிராமத்துக்கு அவர் செல்லவில்லை.
 
ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சின்னதுறை கிராமத்துக்கு முதல்வர் வர வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. ஆனால் முதல்வர் மீனவக் கிராமத்துக்கோ, ஒரு மீனவரின் வீட்டுக்கோகூட செல்லவில்லை. கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திலும், கலெக்டர் அலுவலக ஆய்வுக் கூட்டத்திலும் கலந்துகொண்டுவிட்டு மக்களைச் சந்திக்காமலேயே புறப்பட்டார் அவர்.
 
ஒரு மீனவ கிராமத்துக்கு கூட செல்லாமல், மீனவர்களை நேரடியாக சந்திக்காமல் 5 மணி நேரத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர் இந்த அறிவிப்புகளை சென்னையில் இருந்துகொண்டே அறிவித்திருக்கலாமே, ஏன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியையும், மக்களையும் சந்திக்க செல்கிறேன் என குமரிக்க செல்ல வேண்டும் என சாதரண பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர்.