1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (10:42 IST)

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து ‘பீட்டா’ அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, தமிழக அரசால் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு,  குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் 
பெற்ற பின்  ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது.
 
இந்தச் சட்டத்தை எதிர்த்து பீட்டா அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பீட்டா அளித்த மனுவில் தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள விலங்குகளுக்கான அடிப்படை உரிமையை மீறும் வகையில் உள்ளதென்றும் இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் 15 பேர் இறந்ததாகவும் பல பேர் காயமடைந்ததாகவும் அறிக்கை அளித்தது. எனவே தமிழக அரசு இயற்றிய  சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பீட்டா கோரியது.
 
இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரோஹிங்டன் நாரிமன் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின் முடிவில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பது உறுதியாகியுள்ளது.