திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி!
திருச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மதுரையிலிருந்து வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பெற்றுக்கொண்டார்.
அதனை விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், காவலர்கள் உள்ளடங்கிய ஜோதி ஓட்டக் குழுவினரிடம் வழங்கி, திருச்சியில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு ஜோதி ஓட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த ஓட்டம் திருச்சி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் வழியாக மன்னார்புரம், ரயில்வே ஜங்சன், மேம்பாலம் ரயில்வே ஜங்சன், தலைமை அஞ்சல் நிலையம், மகாத்மா காந்தியடிகள் சிலை ரவுண்டானா, மாநகராட்சி சாலை, கோர்ட்ரோடு, சாலைரோடு, காவிரிப் பாலம், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம், சமயபுரம் மற்றும் முக்கொம்பு வரை சென்று பின்னர் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடையும். அதன்பின்னர், இன்று மாலை இந்த ஜோதி சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.