திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (07:16 IST)

வந்தே பாரத் ரயில் ரத்து.. மணிமுத்தாறு அணையில் 10000 கன அடி திறப்பு.. தென்மாவட்ட தகவல்கள்..!

தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும், மணிமுத்தாறு அணையில் 10000 கன அடி திறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 108 அடியாக உள்ளது என்றும், அணையின் நீர்வரத்து விநாடிக்கு 25,000 கன அடி ஆகவும் நீர்திறப்பு வினாடிக்கு 10,000 கன அடி நீர் ஆகவும் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காரையார், சேர்வலாறு அணைகளுக்கு 31,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் 32,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 84 புள்ளி 5 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாகவும், திருச்செந்தூர் - 66.9 செ.மீ., ஸ்ரீவைகுண்டம் - 60.7 செ.மீ., சாத்தான்குளம் - 44.7 செ.மீ., கோவில்பட்டி - 37.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கனமழை எதிரொலியாக இன்று வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நெல்லை - சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் வந்தே பாரத் ரயில் ரத்து  செய்யப்படுவதாகவும், அதேபோல் திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லை - ஜாம் நகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிஜாமுதீன்  - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், முத்துநகர் விரைவு ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.,

Edited by Siva