சீன அதிபர் வருகிறார், சாலை பயணிகள் ”Take diversion”..
பிரதமர் மோடியும் சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளதை அடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் போக்குவரத்து வழிதடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதன் படி, அக்டோபர் 11 ஆம் தேதி, 12.00 மணி முதல் 14.00 மணி வரை பெருங்குளத்தூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி.எஸ்.டி. சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல்,, மதுரவாயில் புறவழி சாலையில் திருப்பிவிடப்படும். மேலும் சென்னை தென் பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும், பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக, குரோம்பேட்டை-தாம்பரம் வழியாக புறவழிசாலையை பயன்படுத்தி செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 11, 15.30 மணி முதல் 16.30 மணி வரை ஜி.எஸ்.டி. சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திபாரா சந்திப்பிலிருந்து 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.
அக்டோபர் 11, 14.00 மணி முதல் 21.00 மணி வரை, ஓ.எம்.ஆர் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக அக்டோபர் 12 ஆம் தேதி, 7.30 மணி முதல் 14.00 மணி வரை ஓ.எம்.ஆர். வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக திருப்பிவிடப்படும்.
மேலும் அன்று 07.00 மணி முதல் 13.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. சாலை, அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரை சாலை, ஆகிய சாலைகளில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கல் ஆகியவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.