வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (09:56 IST)

செய்தி வாசிப்பாளர் பணிக்கு ஆசை; நம்பி வந்த பெண்ணிடம் நகைகள் அபேஸ்!

சென்னையில் செய்தி வாசிப்பாளர் பணி வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணிடம் நகையை கும்பல் ஒன்று திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரியை சேர்ந்த மினிமோல் என்ற பெண் சென்னையில் தங்கி வந்துள்ளார். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், செய்தி வாசிப்பாளராக வேண்டும் என விருப்பம் இருந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பெண் செய்தி வாசிப்பாளர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். உடனே அதில் உள்ள அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு விவரம் கேட்டிருக்கிறார்.

தாங்கள் சினிமா மற்றும் செய்தி சேனல்களுக்கு ஆட்களை பணியமர்த்தும் ஏஜென்சி என கூறிய அவர்கள் மினிமோலை இண்டர்வியூ செய்ய வேண்டும் என துரைப்பாக்கம் அழைத்துள்ளனர். ஏஜென்சியின் ஆள் ஒருவரே வந்து மினிமோலை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தீபா என்ற பெண்ணும், ராவின் பிஸ்ட்ரோ என்ற நபரும் இளம்பெண்ணிடம் இண்டர்வியூ நடத்தியுள்ளனர். பிறகு செய்தி வாசிப்பது போல கெமராவில் ரெக்கார்ட் செய்ய வேண்டும், அதற்கு மேக்கப் போட வேண்டும் என கூறியுள்ளனர்.

அதை நம்பிய இளம்பெண் தனது நகைகளை அறையில் கழற்றி வைத்துவிட்டு முகம் கழுவ கழிவறை சென்றுள்ளார். அப்போது அந்த மோசடி கும்பல் கழிவறை கதவை தாழிட்டு விட்டு நகைகளை தூக்கிக் கொண்டு தப்பித்துள்ளனர். மினிமோல் பல மணி நேரமாக கதவை தட்டவும் ஹோட்டல் ஊழியர்கள் வந்து கதவை திறந்து விட்டுள்ளனர்.

இதுகுறித்து மினிமோல் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து சம்பந்தபட்ட ஆட்களை கைது செய்துள்ளனர்.