புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (08:55 IST)

பேருந்தில் ஒழுகியது மழை நீரா? ஊழலா? – கமல் கலாய் ட்வீட்!

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அரசின் புதிய பேருந்தில் மழைநீர் ஒழுகியதாக வெளியான செய்தி குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கியுள்ளதால் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு முதல் தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகம் வரை பல நகரங்கள் மழை நீரால் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசு புதிதாக போக்குவரத்திற்கு அளித்த புதிய பேருந்துகளின் உள்ளே மழை நீர் ஒழுகுவதும் பயணிகள் குடை பிடித்தபடி பயணிக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “புத்தம்புது பஸ் விட்டிருக்கிறது அரசு. மழை பெய்ததும் உள்ளே ஒழுக, குடைப் பிடித்து உட்கார்ந்திருக்கிறார்கள் பயணிகள். உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? பயணிகள் பிடித்தது குடையா, ஆளுங்கட்சிக்கான கறுப்புக் கொடியா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.