1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2025 (09:08 IST)

எப்படி நம்பி கீழ போறது..? மெட்ரோ பாலம் இடிந்த விபத்தால் சென்னை மக்கள் பீதி!

Chennai Metro accident

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளின்போது பாலத்தின் ராட்சத தூண் சரிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை பூந்தமல்லி - பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், போரூர் - நந்தம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் பாலத்தின் கீழ் வாகனங்கள் செல்வதற்காக 30 அடி உயரத்திற்கு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

 

இதற்காக சாலையில் இரு ஓரங்களிலும் உள்ள தூண்களின் மீது குறுக்கே கர்டர் தூண்கள் அமைக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில் சுமார் 40 அடி நீளமுள்ள கர்டர் தூண் திடீரென சரிந்து கீழே சாலையில் விழுந்தது.

 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்றுக் கொண்டிருந்த நிலையில் தூண் அவர் மீது விழுந்ததில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். அதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் தடுப்புகளை அமைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். க்ரேன் மூலம் ராட்சத தூண் அகற்றப்பட்டது. இந்த விபத்தில் பலியானவர் பெயர் ரமேஷ் என தெரிய வந்துள்ளது.

 

தற்போது இடிபாடுகள் அகற்றப்பட்டு சாலை புழக்கத்திற்கு வந்திருந்தாலும், மெட்ரோ பாலத்தின் கீழே பயணிக்க மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்டர் சரிந்து விழுந்தது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K