திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2020 (13:04 IST)

சென்னையை உலுக்கிய மூவர் கொலை சம்பவம்; மும்பை விரைந்த தனிப்படை!

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பை விரைந்துள்ளனர்.

சென்னை சௌகார்பேட்டை அருகே யானைகௌலி பகுதியில் பைனான்ஸ் வியாபாரம் செய்து வந்தவர் தலில் சந்த். இவரது மகன் ஷீத்தல் சந்த் தனது மனைவியை பிரிந்து தாய், தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். தலில் சந்தின் மகள் பிங்கி திருமணமாகி சென்னையில் வேறு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது தாயார் வீட்டிற்கு போன் செய்த பிங்கி, நீண்ட நேரமாக யாரும் போனை எடுக்காததால் நேரடியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. திருமணமாகி மனைவி ஜெயமாலாவை பிரிந்து ஷீத்தல் வசித்து வந்த நிலையில், ஜெயமாலா மற்றும் அவரது சகோதரர்கள் அடிக்கடி வந்து ஜீவானாம்சம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதற்காக அடிக்கடி புனேவிலிருந்து அவர்கள் சென்னை வந்து மிரட்டி சென்ற நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும் இதுகுறித்து பேசலாம் என தலில் சந்த் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஜெயமாலாவின் சகோதரர்கள் நேரடியாகவோ அல்லது கூலிப்படை வைத்தோ தலில் சந்த் குடும்பத்தை கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலை வழக்கு குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு தனிப்படை ஜெயமாலா குடும்பத்தை விசாரிக்க மும்பை புறப்பட்டுள்ளனர்.