சென்னையில் புதிதாக 3 மேம்பாலங்கள்! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னையில் போக்குவரத்து வசதிக்காக மூன்று மேம்பாலங்கள் கட்டப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழக தலைநகரான சென்னை தொழில்துறை நகரமாகவும் இருப்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னையின் முக்கியமான பல பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, வியாசர்பாடி ஜீவா ரயில் நிறுத்தம் அருகே கணேசபுரத்தில் 4 வழி மேம்பாலம், தியாகராயர் நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை 2 வழி மேம்பாலம், ஓட்டேரி நல்லா அருகே 2 வழி மேம்பாலம் கட்டப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.