வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (14:45 IST)

சிறுத்தையுடன் போராட்டம்; கட்டிப்புரண்ட விவசாயிகள்! – ஈரோடில் அதிர்ச்சி!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே தாக்க வந்த சிறுத்தையோடு விவசாயிகள் கட்டிப் புரண்டதால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பாப்பாகுளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாறன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விளைவித்திருந்த சோளத்தை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வயல் பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து மாறனை தாக்கியுள்ளது. மாறனின் அலறலை கேட்ட வரதராஜன் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் அங்கு ஓடிவந்துள்ளனர்.

மூவரையும் சிறுத்தை தாக்கிய நிலையில், அவர்களும் படுகாயங்களுடன் சிறுத்தையுடன் தொடர்ந்து போராடியுள்ளனர். அவர்கள் சத்தத்தை கேட்டு மக்கள் அங்கு ஓடிவரவும் சிறுத்தை தப்பி ஓடியுள்ளது. படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுத்தையை தேடும் பணியை வனத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.