புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (16:53 IST)

மே 3-க்கு பிறகும் ஊரடங்கு... சூசகமாக சேதி சொன்ன தமிழக அரசு!

மே 3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பட கூடும் என்பதை தமிழக அரசு அரசாணையில் சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு தளர்வு அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. 
 
ஆனாலும் தமிழக அரசு ஊரடங்கு முடியும்வரை தளர்வுகள் அளிக்கப்போவதில்லை என அறிவித்தது. இந்நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி தமிழக தொழில் அதிபர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். 
 
அதை தொடர்ந்து ஊரடங்கு முடியும் நிலையில் முதற்கட்டமாக சில ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர ஆலை, கண்ணாடி, டயர் ஆலைகள், மிகப்பெரிய காகித ஆலைகள்  உள்ளிட்ட ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது, தமிழகத்தில் ஊரடங்கத் தளர்வுகளின் போது, எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், அரசாணை கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
 
மேலும், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. 
 
அதேபோல், 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், மே 3 ஆம் தேதிக்கு பிறகு மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்னும் தளர்வு அறிவிக்கப்படவில்லை. 
 
இதில் இருந்து மே 3 ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கி நீட்டிக்கப்பட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும் எனவும் தெரிகிறது. 
 
மேலும், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 27ஆம் தேதி அனைத்து மாநில முதல்வரகளுடன் காணொலி மூலம் ஆலோசனை செய்ய உள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளது.