ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (15:44 IST)

மோடி என்ன செய்யலாம்? பரிந்துரைகளை அடுக்கி வைகோ கடிதம்!!

வேலை இழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் மூலம் உதவிக் கரம் நீட்டுக என கேட்டு பிரதமருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். 
 
அந்த கடித்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொள்ளை நோய் கோவிட்  19 காரணமாக எதிர்பாராத வகையில் 24.03.2020 முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏழைத் தொழிலாளர் குடும்பங்கள் வருவாய் இழப்பின் விளைவாக பட்டினியால் வாடும் ஆபத்து உருவானால், மிகப்பெரிய சமூகக் கொந்தளிப்புக்கு வழிவகுத்துவிடும். எனவே அரசாங்கம் தீர்வு காண கீழ்காணும் பரிந்துரைகளை முன் வைக்கிறேன்.
 
தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தில் (ESIC) பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், திடீரென்று வேலை இழக்க நேரிட்டால் ‘அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா (Atal Bimit Vyakti Kalyan Yojana)’ திட்டத்தின் கீழ் அவர்கள் கடைசியாக பெற்றுவந்த ஊதியத்தின் 25 விழுக்காடு மூன்று மாதத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது.
 
இதனை 50 விழுக்காடாக உயர்த்தி வழங்க ஆவன செய்ய வேண்டும். தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தில் 3.19 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். இதில் உள்ள நிதி மூலதனம் ரூ.91444 கோடியில், ரூ.23151 கோடி இருப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தொழிலாளர்கள். தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இரண்டு மாதங்களாகக் குறைக்க வேண்டும்.
 
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் இச்சலுகையை வாழ்நாளில் ஒருமுறைதான் பயன்படுத்த முடியும் என்ற விதிமுறையைத் தற்போது உலக அளவில் ஏற்பட்டுள்ள கொள்ளை நோயைக் கருத்தில் கொண்டு நீக்க வேண்டும்.
 
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் ‘அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் வேலை இழப்புக்கான சலுகைகளை தற்போதுள்ள ஊரடங்கு காலத்தில் வழங்க முடியாத நிலை இருந்தால், நிலைக்குழு மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் ஆகியவற்றின் மூலம் ‘சிறப்புத் திட்டம்’ ஒன்றை வகுத்து, வேலை இழக்க நேரிட்ட தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார்.