செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : சனி, 7 செப்டம்பர் 2019 (18:47 IST)

தமிழைப் புறக்கணிக்கும் மத்திய அரசு ... ஏன் இந்த ஓரவஞ்சகம் ..?

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி என்ற பெருமை தமிழுக்கு உண்டு. இத்தனை வருட காலத்தில் தமிழின் எல்லை மற்றும் பண்முகத்தன்மை,கலாச்சரம் போன்றவை இன்று உலகம் முழுவதும் வியாபித்து நிற்கின்றது.
எதோ நேற்று பெய்த புரட்சி  மழையில், இன்று முளைத்த மொழிக் காளான் அல்ல நம் தமிழ். ஆழ வேரூன்றியுள்ள இந்த தமிழ் கலாச்சாரத்தின் தோற்றமும் பெருமையும் பல உலக அறிஞர்களையும், யோசிக்க வைத்துள்ளது. இந்தியாவில் வேதமொழி என்கின்ற சமஸ்கிருதமும் பக்தி மற்றும் கவிதை மொழி என்கின்ற தமிழும் மிக மூத்தது, மற்ற மொழிக்கெல்லாம் முன்மாதிரியாக இலக்கியத்திலும் படைப்பிலும்  சிறந்து விளங்குகின்றன.
 
தற்போது சமஸ்கிருதத்தில் மந்திரங்களாக கோயில்களில் வழிபாடு செய்துவந்தாலும் கூட இன்று வேத காலத்தைப்( ரிக் ,யதூர் ,சாம ,அதர்வனம்,) போன்றும் அதன்பிறகு வந்த இடைக்காலச் சமஸ்கிருத இலக்கியங்களைப் போன்று ( கீதை ) சொல்லும் படியான இலக்கியக்கியங்கள் வெளியாகவில்லை என்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மொழியில் இன்று சமூக ஊடகத்தில் இருந்து கூட பலரும் தம் படைப்புகளை வெளியிடுகின்றனர்.புத்தகங்களும் வெளியிடுகின்றனர். அது பொதுவெளியில் சஞ்சரித்து இலகியத்தின் தடத்தை ஆழ, அகல உழுது மக்களையும் மாணவர்களையும் இலக்கியப் படைப்பாளிகளாகச் செய்யு பரிணாமத்தைச் செம்மையாகச் செய்து வருகின்றது. 
 
அதுவரை கடவுளின் மொழியாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தை தன் ஆயுளைத் தேய்த்து அம்மொழியின் வேரின் ஆழம்வரைப்போய், பெரும் நாட்களைச் செலவு செய்து ஆராய்ந்து, அதன் மூலத்தைக் கண்டுபிடித்து, உலகின் மிக மூத்த மொழி என்பதை உலகிற்கு அறிவித்தார் மாக்ஸ் முல்லார் என்ற பேரறிஞர். அதை உலகமும்  ஏற்றுக்கொண்டது.
தமிழுக்கும்  அதே நிலைதான் தொடர்கிறது. மொஞ்சதாரோ , ஹரப்பா ஆகிய இடங்களிலும் கூட தமி்ழ்மொழியின் சுவடுகள் திராவிட மொழித்துணுக்குகள்  இருந்ததற்கான அடையாளங்கள் சான்றுகள் உள்ளதென அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகத்தியரின் மாணவர்  தொல்காப்பியர் காலத்தில் கூட தமிழ்மொழியுடன் சமஸ்கிருதம் கலந்துவிட்டது. எனவே இந்த தமிழை மீட்டுருவாக்கம் செய்ய வடமொழியோடு (சமஸ்கிருதம் ) தமிழ் எழுத்தை சேர்ந்துவிடு என்று தம் இலக்கணத்தில் கூறியுள்ளார். அந்த அளவுக்கு வேறெந்த மொழியின் துணையின்றித் தனித்து நின்றியங்கும் சொல்லாளுமைத்தன்மை கொண்டது தமிழ்மொழி.
 
இந்த நிலையில் தேவ நாகரி மொழியை காந்தி ஆதரித்து அதில் அவர் எழுதி வந்தாலும் கூட தில்லையாடி வள்ளியம்மையிடம் தென்னாப்பிரிக்காவில் தமிழ் மொழியைக் கற்றும்கொண்டார். டால்ஸ்டாய் போன்று பொய்யாமொழித்திருவள்ளுவர் மீது அவர் அப்பழுக்கற்ற மரியாதை கொண்டு திருக்குறளும் படித்தார். தமிழில் எழுதவும் செய்தார். அவருக்கு முன்னதாகவே இத்தாலி தேசத்து கால்ஸ்டன்ஸ் ஜோசப் பெஸ்கி என்பாரும் வீரமாமுனிவராகத் தமிழ்பெயர் சூட்டிக்கொண்டு திருகுறளுக்கு ஆங்கிலம் மற்றும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு  செய்து வரலாற்றுச் சிம்மாசத்தில் அழியாப்புகழைச் சம்பாதித்துக்கொண்டார்.
அதேபோன்ற ஆர்வம்தான் மாணிக்காவாசரின் திருவாசகம் படித்த ஆங்கில நாட்டு ஜியு. போப்பை , அதை மொழிபெயர்க்கும்படி செய்தது.
 
இப்படி இத்தனை பழம்பெருமைகொண்ட தமிழ்மொழிக்கு மாற்றாய் ரயில்வே தேர்வுகளில் ஹிந்தியைத் திணிப்பது தமிழ் நெஞ்சங்களுக்கு கட்சிக்கு அப்பாற்பட்டு கசக்கவே செய்யும்!
காரணம் . இந்திய கட்டிடக் கலையும் - கிரேக்கக் கட்டிக் கலையும் இணைந்து காந்தாரக் கலைவடிவமாக உலச்சிற்பக்கலையில் புதிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தமாதிரி இடைக்காலத்தில் தேவநாகரி மற்றும் உருதுமொழிக்கலையின் சேர்மானம் தானிந்த ஹிந்திமொழி.
 
இந்தியாவில் மொழிப்பிரச்சனை உருவெடுத்து, தமிழகத்தில் ஹிந்திக்குஎதிர்ப்பு தெரிவித்து திமுக கட்சியினர்  போராட்டம் நடத்தினர். அப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக அறிஞர் அண்ணா நாடாளுமன்ற மக்களவையில் சகூறும்போது, ’நாட்டில் அதிகம் பேர் பேசிகிறார்கள் என்பதற்காக ஹிந்தியை மற்ற எல்லா மாநிலங்களும் ஏற்பது முறையா ? அப்படியென்றால் நாட்டில் காக்கைகள் அதிகம் என்பதற்க்காக , அதை தேசியப் பறவையாக அறிவிக்க முடியுமா ?எனக் அறிவுக்கேள்வி எழுப்பினார்.’
இப்படி சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை இந்த மொழிப்பிரச்சனை எல்லா ஆட்சிக் காலத்திலும் வேண்டா விருந்தினரைப் போல் மாநிலத்தில்  அடியெடுத்துவைக்கிறது அவ்வளவு நல்லதாகப் படவில்லை என்றே தெரிகிறது.
 
மத்திய அரசிடம் இருந்து , மாநிலத்தின் சுயாட்சியைக் கேட்டார்அறிஞர் அண்ணா .. அதன்படி சென்னைக்கோட்டையில் முதல்வர்கள் சுதந்திரதினத்தில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
 
காவிரி பிரச்சனை தொடர்பாக  மத்திய அரசிதமிழில் தீர்ப்பு வெளியிட வைத்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இம்மாதிரி தற்போது வெளிநாடு சென்றுள்ள முதல்வரும் தமிழகத்திற்கு திரும்பிய பின்பு, ’தமிழக ரெயில்வே தேர்வில் தமிழ்மொழி இடம்பெற அனுமதி பெற்றுத்தரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.’. இந்த உரிமையைப்பெற ஹிந்தியைக் காட்டிலும் அத்தனை  தகுதிகளையும் பெற்றுள்ளது ஆகச்சிறந்த நம் தமிழ்மொழி.
 
இந்நிலையில் எத்தனையோ ஏழை மாணவர்களின் இறுதி வாய்ப்பாக இருப்பது இந்த போட்டித்தேர்வுகள்தான். இதில் ஜெயிக்கவேண்டி மாணவர்கள், இளைஞர்கள்  தங்களைத் தயார் செய்து, அரசு வேலைபெறுவோம் என்ற கனவில் இருக்கும் போது,அவர்களின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போடும் முயற்சியில் மத்திய அரசும், ரயில்வே வாரியமும் ஈடுபடவேண்டாம் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
ரயில்வேதுறைப், பொதுப்போட்டித்தேர்வில் தமிழைப்புறக்கணித்துள்ளது ரயில்வே வாரியம். இதற்கு ,நேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கண்டம் தெரிவித்தார். இன்று திமுக சார்ப்பில் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. தமிழக அமைச்சர்களும் விழித்துக்கொண்டு கட்சிப்போட்டிக் குட்டைக்குள் சிக்காமல் தமிழர்களின் உரிமையையும், தமிழக இளைஞர்களின் எதிர்க்காலத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டுமென்பதே அனைவரும் பொதுவான கோரிக்கையாகும்.