ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு- முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று வேலூரில் பிரசாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவின் திட்டங்கள் உலகத்திற்கே முன்னோடி என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது;
தமிழ் நாட்டில் திமுக அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளன. தமிழகத்தின் காலை உணவுத் திட்டத்தை கனடா அரசு அந்த நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. காலை உணவுத் திட்டத்தால் தமிழ் நாட்டில் 16 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்காமல் காலை உணவுத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த தேர்தலில் வேலூரில் போட்டியிட்ட கதிர் ஆனந்த்தை தோற்கடிக்க தேர்தலை தள்ளிப் பார்த்தார்கள். ஆனால், வாக்காளர்களான நீங்கள் அவர்களை தள்ளி வைத்து வெற்றியைக் கொடுத்தீர்கள், தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; வெள்ள நிவாரண நிதி கொடுக்காத ஒன்றிய அரசுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம். மாநிலங்கள் நீதி பெறவும், நிதி பெறவும் உச்ச நீதிமன்றக் கதவுகளைத்தான் தட்ட வேண்டியுள்ளது என்று கூறினார்.