ஆ ராசா மீது வழக்குப் பதிவு – அதிமுக வழக்கறிஞர் புகாரை ஏற்ற போலீஸார்!
அதிமுக மற்றும் அதன் முன்னாள் தலைவர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்த திமுக எம் பி ஆ ராசா மீது போலிஸார் புகார் பதிவு செய்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய ஊழல் என ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பேசப்பட்ட 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளன. ஒருவருடமாக இவ்வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் 2 ஜி ஊழல் பற்றிய விமர்சனங்கள் எழுந்த போது திமுக எம் பி ஆ ராசா ஜெயலலிதாவையும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதனால் இரு கட்சியை சேர்ந்தவர்களும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் திருமாறன் ஆ ராசா மீது போலிஸில் புகார் அளித்தார். இதையடுத்து இப்போது சென்னை போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.