செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2016 (19:58 IST)

நடிகர் விஷால், நாசர், கார்த்தி மீது கடும் நடவடிக்கை: வாராகி விருப்பம்!

நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட்டை முன்னின்று நடத்தினார் விஷால்.

 
 
இது குறித்து நடிகர் சங்க உறுப்பினரும் இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவருமான வாராகி கூறியதாவது, “தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.வுக்கு எதிரான தோற்றத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு நட்சத்திர கிரிக்கெட் நடந்தது. அதில், ஒட்டுமொத்த நடிகர்களும், 'என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா' என நடிகர்கள் ஒன்று திரண்டு சொல்வார்கள். இது ஆளுங்கட்சியை நேரடியாக தாக்கும் வகையில் இருந்தது. இது ஒருபுறம் இருந்தாலும், கிரிக்கெட் நடத்தியதில் ஆறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. பொதுக் குழுவில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் அனுமதி கொடுத்தால்தான், நிதி தொடர்பான விஷயங்களைக் கையாள முடியும் என விதி இருக்கிறது.

சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுக்காமல் தன்னிச்சையாக நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். தனியார் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்த வகையில் 6 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத்துக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி வந்தேன். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பின்பு ஒரு நாள், நடிகர் சங்கத்தின் மீதான புகார் குறித்துப் பேச வேண்டும் என சங்கத்துக்கு வரச் சொன்னார் விஷால். கடந்த 27.8.2016 அன்று சங்கத்தின் உள்ளே உள்ள ஹாலில் வைத்து என்னிடம் பேசினார் விஷால். சிறிது நேரத்தில் தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அப்போது அருகில் இருந்த பூச்சி முருகனின் ஆட்கள் என்னைத் தாக்க வந்தனர்.

கடுமையான வார்த்தைகளில் என்னைத் திட்டினார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து வெளியில் வந்துவிட்டேன். காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். ’இந்த வழக்கு தேவையற்றது' என உத்தரவிட்டார் நீதியரசர். இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்திருக்கிறேன். நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட ஒன்பது பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். விரைவில் எனக்கான நீதி கிடைக்கும்" என்றார்
 
இந்தக் குற்றச்சாட்டை நடிகர் சங்க நிர்வாகிகள் மறுத்தனர். இது கூறித்து நிர்வாகம் தரப்பில் கூறியதாவது, “புகார் சொல்பவர்கள் முறையான ஆதாரத்தைக் காட்டட்டும். அதைவிட்டுவிட்டு, வெறுமனே குழப்பத்தை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம். சங்க கணக்கு வழக்குகளை யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளும் வகையில் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறோம். தாக்குதல் நடத்த முயற்சித்ததாகச் சொல்வதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டுகள்" என்றனர்.