1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (19:03 IST)

பயிரை அறுவடை செய்யும்வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? - என்எல்சிக்கு நீதிபதி சரமாரி கேள்வி

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின்  2 வது சுரங்கப் பணிகளுக்கான வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 26 ஆம் தேதி  முதல்    சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம்  மீண்டும் ஈடுபட்டு வருகிறது.

8 ஏக்கர் பரப்பளவில்  ஜேசிபி இயந்திரத்தின் மூலம் விளைநிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி தற்போது நடந்து வருவதால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்தப் பரபரப்பான சூழலில் கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தற்போது என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகள் தொடங்கிய நிலையில்,  ''இந்த  நிலத்திற்கு பணம் கொடுக்கும்போது அதை கையப்படுத்தியிருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டிருக்காது'' என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தர்மராஜ் கூறியிருந்தார்.

அதாவது, ''என்.எல்.சி நிறுவனம்  இந்த நிலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதமே விளை நிலங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பயிர்களுக்கு இழப்பீடு கொடுக்க என்.எல்.சி நிர்வாகம் முன்வந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் என்எல்சி நிறுவனத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதில்,   ’’பயிரை அறுவடைசெய்யும்வரை 2 மாதங்கள் காத்திருக்க முடியாதா? நிலத்தில் புல்டோசர்களை விட்டு தோண்டும் பணிகளைப் பார்க்கும்போது, அழுகை வந்தது’’ என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.