''என்.எல்.சி நிறுவனம் இந்த நிலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டது- கடலூர் மாவட்ட ஆட்சியர்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 2 வது சுரங்கப் பணிகளுக்கான வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
கடலூர் வளையமாதேவியில் 8 ஏக்கர் பரப்பளவில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் விளைநிலங்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் பரபரப்பான சூழலில் கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தற்போது என்.எல்.சி சுரங்க விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ''இந்த நிலத்திற்கு பணம் கொடுக்கும்போது அதை கையப்படுத்தியிருந்தால் இப்பிரச்சனை ஏற்பட்டிருக்காது'' என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தர்மராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ''என்.எல்.சி நிறுவனம் இந்த நிலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்துவிட்டது. கடந்த டிசம்பர் மாதமே விளை நிலங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் பயிர்களுக்கு இழப்பீடு கொடுக்க என்.எல்.சி நிர்வாகம் முன்வந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.