ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (12:13 IST)

சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு பிரபுதேவா முன்னிலையில் உலக சாதனை நிகழ்ச்சி!

திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு திறந்தவெளி அரங்கத்தில் நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி என்ற நடன நிகழ்ச்சி  நடைபெற்றது. 
 
இதில் சென்னை மற்றும் மற்ற மாவட்டம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நடன பயிற்சி பள்ளிகளை சேர்ந்த சுமார் 1800க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். 
 
மாலை சுமார் 6.30 மணியளவில் பிரபுதேவா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார்.
 
மேடையில் பிரபுதேவா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பிரபுதேவா கூறியதை தொடர்ந்து உலக சாதனை நிகழ்ச்சி தொடங்கியது.
 
பிரபுதேவா நடனத்தில் உருவான 100பாடல்கள் இதில் இசைக்கப்பட்டன. தொடர்ந்து 100நிமிடங்களுக்கு 100பாடல்கள் இசைக்கப்பட்ட போது ஒவ்வொரு குழுவினராக மேடை அருகே வந்து நடனமாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
 
1நிமிடத்துக்கு 1பாடல் என்ற வகையில் நேரம் குறைக்கப்பட்டு அடுத்தடுத்து பாடல்கள் இசைக்கப்பட்டன.
 
தொடர்ந்து நடன கலைஞர்கள் பிரபுதேவாவின் பாடல்களுக்கு நடனமாடினர். நடன கலைஞர்கள் நடனமாடுவதை  நாற்காலியில் அமர்ந்து பார்க்காமல் மேடையில் நின்றபடியே பிரபுதேவா கண்டு களித்தார். 
 
நீண்ட நேரம் மேடையில் நின்றதால் சோர்வடைந்த போதும் நாற்காலியில் அமராமல் குத்து கால் போட்டு கொண்டும், முழங்காலில் முட்டி போட்டு கொண்டும் சிறிது நேரம் தம்மை ஆசுவாசப்படுத்தி கொண்ட பிரபுதேவா, மீண்டும் எழுந்து நின்றபடி ரசித்து நடன கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். அவ்வப்போது மாணவர்கள் ஆடிய நடனம் குறித்து அருகில் நின்றிருந்த ராபர்டிடம் பேசி அந்த பாடலின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு குழுவினராக வந்து பாடலுக்கு ஏற்ப நடனமாடி திறமைகளை வெளிப்படுத்தினர்.
 
தொடர்ந்து 100 நிமிடங்கள் 100பாடல்களுக்கு நடனமாடி இன்டர்நேஷனல் ப்ரைடு வேர்ல்ட் ரெகார்ட் சாதனை நிகழ்த்தினர். தொடர்ந்து பிரபுதேவை போற்றும் வகையில் உருவாக்கப்பட்ட பாடலும் இசைக்கப்பட்டு நடன கலைஞர்கள் நடமாடினர். 
 
அந்த பாடலை நாற்காலியில் அமர்ந்தபடி பிரபுதேவா கண்டு ரசித்தார். தொடர்ந்து உலக சாதனை நிகழ்த்தியதற்கான அங்கீகாரமாக ஒரு குழுவினருக்கு பிரபுதேவா சான்றிதழை வழங்கினார். பிரபுதேவா புறப்பட்டு சென்றதை தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.
 
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்ட பிரபுதேவா நடன குழுவினர்களுடன் செல்பி எடுத்து கொண்டு நிகழ்வில் இருந்து புறப்பட்டார். சுமார் 2 மணி நேரம் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபுதேவா மேடையில் நடனம் ஏதும் ஆடாமல் சென்றதால் அங்கு திரண்டிருந்த நடன கலைஞர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகினர். 
 
இந்த நிகழ்வில் நடன இயக்குனர் ராபர்ட், நடிகர் ரோபோ சங்கர், நடிகை இந்திரஜா சங்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.