வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (00:12 IST)

ஆங் சான் சூ ச்சீ: மியான்மர் தலைவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடங்கியது

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கைப்பற்றிய ராணுவ நிர்வாகம், அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ ச்சீக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.
 
கொரோனா விதிகளை மீறியது, உரிமம் இல்லாமல் வாக்கி டாக்கி கருவிகளை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளின்கீழ் தற்போதைய விசாரணையை அவர் எதிர்கொண்டுள்ளார்.
 
இது தவிர அவர் மீது ஊழல் முறைகேடு மற்றும் அலுவல்பூர்வ ரகசிய காப்புப் பிரமாணத்தை மீறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணை பின்னர் நடத்தப்படும் என்று தெரிகிறது.
 
ராணுவ நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் குழுக்கள் கண்டித்துள்ளன. எதிர்கால தேர்தல்களில் ஆங் சான் சூ ச்சீ போட்டியிடுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
75 வயதாகும் ஆங் சான் சூ ச்சீ, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ராணுவ நிர்வாகத்தால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு அவ்வப்போது நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படும்போது மட்டும் சில நிமிடங்கள் அவரை சிலர் பார்த்துள்ளனர்.
 
அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ராணுவ நிர்வாகம் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அனுமதி கோரியுள்ளனர்.
 
இது தவிர, ஆங் சான் சூ ச்சீ மீது தேச துரோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
 
கடந்த வாரம் ஆங் சான் சூ ச்சீ மீது சட்டவிரோதமாக ஆறு லட்சம் அமெரிக்க டாலர்கள் வாங்கியது மற்றும் சுமார் 11 கிலோ தங்கம் வைத்திருந்ததாக மேலும் சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
 
கடந்த பிப்ரவரி மாதம் மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவ தலைமை, கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக கூறியது.
 
ஆனால், சுயாதீன தேர்தல் பார்வையாளர்கள், அந்த தேர்தல் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடந்ததாக கூறினார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் ஆங் சான் சூ ச்சீ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.