செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 15 ஜூன் 2024 (12:25 IST)

அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்..! முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்... வைகோ..!

Vaiko
அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன்குமார் (வயது 28), பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதயதாட்சாயினி (வயது 23) இணையர் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர்.
 
இந்த இணையருக்கு பொதுவுடமை இயக்கத் தோழர்கள் ஆதரவாக இருந்ததால் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

 
தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.