1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2016 (12:24 IST)

ஏ.டி.எம் கார் கடத்தல்; ரூ.26 லட்சம் கொள்ளை : சென்னையில் பரபரப்பு

ஏ.டி.எம் கார் கடத்தல்; ரூ.26 லட்சம் கொள்ளை : சென்னையில் பரபரப்பு

ஏ.டி.எம் மையத்திற்கு பணம் கொண்டு சென்ற வேனை கடத்தி, கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை பாரிமுனை அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் அங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக, அயனாவரத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த கார் ஒன்றில் ரூ.37 லட்சம் எடுத்து செல்லப்பட்டது. காரில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் சுரேந்தர் மற்றும் பாதுகாப்பு நிறுவன ஊழியர் ஆகியோர் இருந்துள்ளனர்.
 
காரை அங்கு நிறுத்தி ரூ.22 லட்சம் பணத்தை எடுத்து, ஏ.டி.எம்.மில் பணத்தை நிரப்பும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். கார் டிரைவர் நாராயணன் மட்டும் காரில் இருந்தார். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வரவே அவர் பேசிக்கொண்டே காரை விட்டு கீழே இறங்கியுள்ளார். சாவி காரிலேயே இருந்தது.
 
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் இருவர் காரில் ஏறி ஓட்டிச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாராயாணன் கூச்சல் போட்டுள்ளார். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
 
அதன்பின் ஊழியர்கள் வடக்கு கடற்கரை போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்தனர். உஷாரான போலீசார் அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். கடத்தப்பட்ட காரையும், கொள்ளையர்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
 
அப்போது, ராயபுரம் மாதா கோவில் அருகே அந்த கார் நிற்பது தெரியவந்தது.  உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் காரில் சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 
 
அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவரான ராஜேஸ் மற்றும் அவரது நண்பர் லிங்கம் ஆகிய இருவரும் சேர்ந்துதான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரு.26 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
முதலில் காரில் இருந்தது ரூ.15 லட்சம் என்று கூறப்பட்டது. ஆனால், காரில் இருந்தது ரூ.26 லட்சம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.