1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (06:32 IST)

நின்ற கோலத்தில் அத்தி வரதர்: அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இதுவரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்தி வரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். அத்தி வரதரின் நின்ற கோலத்தை தரிசனம் செய்ய இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி அளித்தார். அவரை இந்திய ஜனாதிபதி முதல் பாமர குடிமக்கள் வரை பலர் தரிசனம் செய்தனர். கடந்த ஒரு மாதத்தில் 44 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் நேற்று வரை சயன கோலத்தில் காட்சியளித்து வந்த அத்திவரதர் இன்று காலை முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதரின் நின்ற கோலத்தை காண நேற்றிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை அடைந்தனர். இம்மாதம் 17 ஆம் தேதி வரை அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பெரும்பாலான பக்தர்கள் சயன கோலத்தில் அத்திவரதரை தரிசித்தவர்களே நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரையும் தரிசனம் செய்ய வந்துள்ளதாக தெரிகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் பாதுகாப்புக்கு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.