ஆதரவு 121 மட்டுமே; வராத எம்.எல்.ஏ எப்படி ஓட்டு போட்டார்? - புதிய சர்ச்சை
எடப்பாடி பழனிச்சாமி முன் மொழிந்த தீர்மானத்தில் 122 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததாகவும், இதனால் அவர் வெற்றி பெற்று விட்டார் எனவும் சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதேபோல், அவருக்கு எதிராக ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால், கந்தரவகோட்டை அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் நீண்ட நாட்களாக உடல் நிலைக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் கடந்த சனிக்கிழமையும் சட்டசபைக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது.
அப்படிப் பார்த்தால் எடப்பாடியை ஆதரித்த அதிமுக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 121 மட்டுமே. சபாநாயகர் தனபால் எதை வைத்து 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறினார் என வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாக பரவி வருகிறது.
இதுபற்றி எம்.எல்.ஏ.ஆறுமுகமும் எந்த கருத்தையும் கூறவில்லை. எனவே, இந்த விவகாரத்தை திமுக தரப்பு ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.