ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சென்னை வீரர் விபத்தில் பலி

Last Modified புதன், 15 மே 2019 (08:15 IST)
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித்தந்த சென்னை வீரர் ஒருவர் நேற்று நடந்த விபத்தில் பரிதாபமாக பலியானார்
சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன் விடுமுறையில் சென்னை வந்துள்ளார். இந்த நிலையில் தனது உறவினர் ஒருவரை பார்த்து விட்டு தோழியுடன் அரும்பாக்கம் வழியாக இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு வீடு திரும்பி் கொண்டிருந்தார். அப்போது ஜல்லிக்கலவை ஏற்றி வந்த லாரியை முந்த முயன்றபோது திடீரென நிலைதடுமாறி லாரிக்கு அடியில் விழுந்தார். இதனால் லாரியின் சக்கரத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விடுமுறைக்கு ஊருக்கு வந்த விளையாட்டு வீரருக்கு நேர்ந்த பரிதாபத்தால் அவருடைய உறவினர்கள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :