ரஜினி பாஜகவின் ‘பி’ டீமா? ஆதரவு தெரிவிக்கும் இந்து மக்கள் கட்சி!
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவளிக்கும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினி எதிர்வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவரது தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் ராகவேந்திரா கோவிலில் ரஜினி தொண்டர்கள் நடத்திய வழிபாட்டு கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து சலித்து போன மக்களுக்கு ரஜினி ஆன்மீக அரசியலை வழங்க இருக்கிறார். ரஜினியை சிலர் பாஜகவின் “பி” டீம் என்றும், சாதி, மத அரசியல் பூசி பேசியும் வருகின்றனர். ஆனால் அவற்றை முறியடித்து ரஜினி மக்களை ஈர்ப்பார். ஆன்மீக அரசியல் கொண்ட ரஜினியின் கட்சிக்கு தேர்தலில் இந்து மக்கள் கட்சி உறுதுணையாக நிற்கும்” என கூறியுள்ளார்.