1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (13:31 IST)

திருவள்ளுவருக்கு காவித் துண்டு! - அர்ஜுன் சம்பத் கைது

திருவள்ளுவருக்கு காவித் துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளையார்ப்பட்டியில் மர்ம ஆசாமிகளால் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற கருத்து பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது.

பிள்ளையார்ப்பட்டியில் சேதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பல கட்சி தலைவர்களும் நேரில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிள்ளையார்ப்பட்டி சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு போர்த்தி, ருத்திராட்ஷ மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார்.

பின்னர் கும்பகோணம் வழியாக சென்று கொண்டிருந்த அர்ஜுன் சம்பத்தை போலீஸார் கைது செய்து தஞ்சை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் அனுமதியின்றி சால்வை அணிவித்தது, ருத்திராட்ஷ மாலை அணிவித்ததற்காக அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.