ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (16:42 IST)

2024 தேர்தலில் திமுக - பாஜக இடையே தான் போட்டி: அண்ணாமலை பேட்டி..!

2024ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில்  திமுக - பாஜக இடையே தான் போட்டி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் இன்று தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்த போது, ‘இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து  எதற்கு ஊடகங்களிடம் சொல்ல வேண்டும்? என்று கூறிய அவர், தமிழக மக்களிடத்தில் எப்போது சொல்ல வேண்டுமோ, அப்போது சொல்கிறேன் என்று தெரிவித்தார்.

பாஜக கட்சி எப்படி தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்? எந்தப் பாதையில் செல்ல வேண்டும்? 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதை பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று தெரிவித்தார்.

2024-ல் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 2024-ல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் வாக்கு சதவீதத்தையும் நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்றும் கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதற்கு வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்தந்த கட்சிகள், அந்தந்த கட்சியின் வளர்ச்சியைத்தான் பார்க்க வேண்டும். பாஜக தன்னுடைய வளர்ச்சியைப் பார்க்கிறது. இதில் வருத்தப்படவோ, சந்தோஷப்படவோ ஒன்றும் இல்லை என்றும் கூறினார்.



Edited by Mahendran