என்.எல்.சி விவகாரத்தில் எத்தகைய போராட்டத்தை நடத்தவும் பா.ம.க. தயங்காது: அன்புமணி
என்.எல்.சி விவகாரத்தில் எத்தகைய போராட்டத்தை நடத்தவும் பா.ம.க. தயங்காது என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
என்.எல்.சி சுரங்க விரிவாக்கம், புதிய சுரங்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டம் தென்குத்து, வானதிராயபுரம் பகுதிகளுக்கு இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்!
நெய்வேலி மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து நிலக்கரி எடுத்து பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டி வரும் என்.எல்.சி, அவர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு கட்டுப்படியாகும் விலையையும் வழங்க மறுக்கிறது. இது பெரும் அநீதி!
நிலம் கொடுத்த மக்களுக்கு எந்த உரிமையும் வழங்க முடியாது; தமிழகத்திலிருந்து கிடைக்கும் எல்லா லாபத்தையும் வட இந்தியாவுக்கு கொண்டு செல்வோம் என்ற என்.எல்.சியின் கொள்கை, கிழக்கு இந்திய கம்பெனியின் கொள்கையை விட கொடூரமானது ஆகும். இதை என்.எல்.சி மாற்றிக் கொள்ள வேண்டும்!
தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலம் மற்றும் உழைப்பில் செழிக்கும் என்.எல்.சி தமிழர்களுக்கு வேலை வழங்க மறுக்கிறது; நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சி கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கிறது; இப்படிப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் தேவையில்லை!
ஏற்கனவே நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கட்டுபடியாகும் விலை வழங்காமல் புதிதாக நிலம் எடுக்க அனுமதிக்க இயலாது. மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை பாதுகாக்க எத்தகைய போராட்டத்தை நடத்துவதற்கும் பா.ம.க. தயங்காது!