1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2023 (10:50 IST)

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி நிலைப்பு செய்யப்படவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு..!

குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமி்ழ்த்துறையில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பணி நிலைப்பு செய்யவில்லை என்றும், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
ஆந்திர மாநிலம் குப்பம் வட்டத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பிற திராவிட மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்த்துறையில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி நிலைப்பு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்போது கூட ஆந்திரத்தைச் சேர்ந்த ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 15 பேர் பணி நிலைப்பு செய்யப்படவுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் அல்லாத பணியாளரான இளநிலை உதவியாளர் பொன்னுசாமி என்பவர் மட்டும் தான் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறார் என்றாலும் கூட, அவர் பணி நிலைப்பு செய்யப்படவில்லை. தமிழ்நாடு அரசு போதிய நிதி ஒதுக்காதது தான் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 
திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவும், அங்கு தமிழ்த்துறையில் பணியாற்றும் 1 பேராசிரியர், 1 இணைப்பேராசிரியர், 2 உதவி பேராசிரியர்களின் ஊதியத்திற்காகவும் தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை நிதி வழங்கி வருகிறது. அதனால், தமிழ்த் துறையில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். ஆனால்,  ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதியத்திற்கு தமிழக அரசு நிதி வழங்காததால் அவர்கள் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தான்  பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தமிழக அரசுக்கு இதுதொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் கூட அதற்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் பலரும் விலகி விட்ட நிலையில், ஒருவர் மட்டுமே  தொடர்ந்து தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறார்.
 
ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் அவற்றின் மொழி சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்து ஊதியம் வழங்க நிதி வழங்குகின்றன. அதேபோல், தமிழ்நாடு அரசும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் ஊதியத்திற்கும் நிதி வழங்க வேண்டும். அதைக் கொண்டு அங்கு தமிழ்த்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே பணியாளரை பணி நிலைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
Edited by Mahendran