புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 ஜூன் 2023 (14:35 IST)

கடலூர் ஆட்சியர் வளாகத்திற்கு ஜான்சிராணி பெயர்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..!

தென்னாட்டு ஜான்சிராணி கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று கூறிய பாமக தலைவர் அன்புமணி, கடலூர் ஆட்சியர் வளாகத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
 இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்திற்கு சொந்தக்காரரும்,  ஆங்கிலேயர்களை துணிவுடன் எதிர்த்து நின்று போராடியவருமான  கடலூர் அஞ்சலையம்மாளின் 133-ஆம் பிறந்தநாள் இன்று. கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; அவரைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை. 
 
வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற #அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். அவருடைய பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம். அவரது தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு அஞ்சலையம்மாளின் பெயரைச் சூட்ட வேண்டும்.
 
Edited by Mahendran