1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (14:31 IST)

செங்கோட்டையன் சவாலை ஏற்ற அன்புமணி : இடம், தேதி, நேரத்தை அறிவித்தார்

பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என சவால் விடுத்த அமைச்சர் செங்கோட்டையனின் சவாலை ஏற்ற பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, அதற்கான இடம், தேதி மற்றும் நேரத்தை அறிவித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிடுபவர்கள்,  தம்முடன் அந்த துறை குறித்து பொதுமேடையில் விவாதம் நடத்தத் தயாரா? என்று கல்வித்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் சவால் விட்டிருந்தார். 
இந்த சவாலுக்கு எந்த ஒரு அரசியல்வாதியும் ரியாக்சன் காட்டாத நிலையில் முதன்முதலாக அன்புமணி ராமதாஸ் இந்த சவாலை ஏற்றுள்ளார். பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் பற்றி சமீபகாலங்களில் தங்கள் கட்சி முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் உறுதி செய்ய தன்னால் முடியும் என்றும்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சவாலை ஏற்று அவருடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் விவாதம் நடத்த நான் தயாராக இருப்பதாகவும் அன்புமணி கூறியிருந்தார்.
 
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக்கொண்டவாறு வரும் 12.8.2017 மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும். இதையேற்று இவ்விவாதத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன். 
 
செங்கோட்டையன் தேவையில்லாத வேறு சில விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். அவர் விரும்பினால் அதுகுறித்தும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்த்து அறிய வசதியாகத் தொலைக்காட்சிகளில் தொடர் நேரலையாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
 
செங்கோட்டையனின் சவாலை அன்புமணி ஏற்றுக்கொண்டார். ஆனால், அன்புமணியின் சவாலை ஏற்று செங்கோட்டையன் இந்த விவாதத்தில் பங்கு பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.