செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (13:02 IST)

அரசு பள்ளிகளிலேயே எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் செயல்படும்! – அன்பில் மகேஷ்!

தமிழக அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நீக்கப்படுவதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பழையபடியே பள்ளிகளில் மேற்கண்ட வகுப்புகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு முதலாக 2,831 பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் நிறுத்துப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்தது. அதற்கு பதிலாக இந்த வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்கட்சி தலைவர்கள், கல்வி ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்று, முதல்வரின் உத்தரவுப்படி எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து பள்ளிகளிலேயே நடைபெறும் என்றும், அங்கன்வாடிக்கு மாற்றப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.