அமமுக டூ அதிமுக டூ பாஜக.. 2 நாளில் 2 கட்சி தாவிய அமமுக பிரமுகர்!
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமமுக பிரமுகர் ஒரு நாளைக்கு ஒரு கட்சி என தாவி வருவது வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில் அமமுக கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.முனுசாமி கடந்த 29ம் தேதியன்று அமமுகவில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். நேற்று அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பாஜக தனித்து போட்டியிடுவது என முடிவாகியது.
பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் அதிமுகவிலிருந்து விலகி உடனடியாக பாஜகவில் இணைந்துள்ளார் எம்.சி.முனுசாமி. 2 நாட்களுக்குள் எம்.சி.முனுசாமி அடுத்தடுத்து கட்சி மாறியுள்ளது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால்தான் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.