செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜனவரி 2019 (08:08 IST)

சபாஷ் எடப்பாடி… – போகி மாசு 40 % குறைவு!

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு போகிப் பண்டிகையின் போது பொருட்களை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை 40 சதவீதம் குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வரியம் தெரிவித்துள்ளது.

பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகையின் போது வீட்டிலுள்ள பழைய உதவாதப் பொருட்களை சுத்தம் செய்து எரிப்பது தொன்று தொட்ட வழக்கமாகும். சிலப் பத்தாண்டுகளாக மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்ததால், போகியின் போது பொருட்களை எரிக்கும் போது உருவாகும் புகையின் அளவு அதிகமானது. மேலும் இந்தப் புகை நச்சுத் தன்மை வாய்ந்ததாகவும் இருந்து வந்தது. இதனால் மக்களுக்கு மூச்சுத் திணறல் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டன.

இதையடுத்து போகியின் போது பிளாஸ்டிக் மற்றும் அதிகப் புகை வெளியிடக்கூடிய இன்னும் சிலப் பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அந்த சட்டம் முறையாகப் பின்பற்றப்படாததால் ஆண்டுதோறும் வெளியாகும் புகையின் அளவு அதிகரித்த வண்ணமே இருந்தது. அதிலும் நகர்ப்புறங்களில் மரங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் போகியின் போது உருவாகும் புகையில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

ஆனால் இந்த ஆண்டு போகிப் பண்டிகையின் போது வெளியான புகையின் அளவு கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நேற்று சென்னை முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட 30 குழுக்கள் காலை முதல் மாலை வரை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த குழுக்கள் செய்த ஆய்வின்படி மக்கள் தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை எரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதற்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்துள்ள தடையுமே முக்கியக்காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு இப்போது புதுச்சேரி அரசும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.