போலீசாருடன் உலா வரும் எஸ்.வி.சேகர்? - ஆளுநரிடம் புகார்
பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக விமர்சித்து, கைது செய்ய வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தமிழக போலீசாருடன் உலா வருவதாக வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட கூட்டத்தில் எஸ்.வி.சேகர் கலந்து கொண்ட போதிலும் அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. எனவே தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், முன்ஜாமீன் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவரை கைது செய்ய போலீசாருக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறிய நீதிபதிகள், உடனடியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். ஆனாலும், அவரை தமிழக காவல்துறை அவரை கைது செய்யவில்லை.
அதோடு, அவர் போலீசாருடன் வாகனத்தில் சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில், வழக்கறிஞர் இளங்கோ என்பவர் எஸ்.வி.சேகர் விவகாரம் பற்றி ஆளுநரிடம் புகார் அளிக்க இருக்கிறார். எஸ்.வி.சேகரை கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரை கைது செய்ய உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் ஆளுநரிடம் இன்று புகார் அளிப்பார் என செய்திகள் வெளிவந்துள்ளது.