அரசியல் காரணங்களுக்காக காலா படத்தை தடை செய்வது தவறு - பிரகாஷ்ராஜ்
காலா திரைப்படத்திற்கும் காவிரி விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவே காலாவை கர்நாடகாவில் திரையிட தடை விதித்திருப்பது தவறான செயல் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட வாட்டாள் நாகராஜ் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை போன்றவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏனென்றால் காவிரி பிரச்சனைக்காக தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இந்த விஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று குமாரசாமி தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிரகாஷ்ராஜ், காவிரி குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து கர்நாடக மக்கள் மனதை புண்படுத்தியிருக்கலாம், ஆனால் இரு மாநிலங்களுக்கான பிரச்சனையை தீர்க்க வேண்டியது அரசின் கடமை. சினிமா துறைக்கு எல்லை கிடையாது. ஆகவே ஒரு சிலரின் அரசியல் காரணங்களுக்காக இப்படத்தை தடை செய்வது தவறு.
காலா படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய வேண்டும். படத்தை பார்ப்பதும் பார்க்காததும் மக்களின் விருப்பம் என பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.