புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (10:22 IST)

வழக்கிலிருந்து விலகினார் : மிரட்டப்பட்டாரா நிர்மலா தேவியின் வழக்கறிஞர்?

கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வழக்கறிஞர் இந்த வழக்கிலிருந்து விலகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. 
 
சிபிசிஐடி போலீசார் நேற்று முன் தினம் தங்கள் விசாரணையை துவங்கியுள்ளனர். அதேபோல், ஆளுநரால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் நேற்று விசாரணையை துவங்கியது.
 
கடந்த 19ம் தேதி சிறையில் நிர்மலா தேவியை சந்தித்த அவரின் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நிர்மலாதேவி தெரிவித்ததாகவும், இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் தான் தெரிவித்துள்ளதாகவும், சிறை அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாவிட்டால் நீதிமன்றம் மூலம் அவருக்கு பாதுகாப்பு அளிக்க கேட்போம் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
மேலும், கல்லூரிகளுக்கு இடையே உள்ள தொழில் போட்டியால் தான் இந்த பிரச்சனையில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆடியோவில் உள்ளது தனது குரல் தான் என்று ஒப்புக்கொண்டுள்ள நிர்மலாதேவி அதில் சில வார்த்தைகள் வெட்டப்பட்டும், ஒட்டப்பட்டும் உள்ளதாக கூறியதாவும் பாலசுப்பிரமணி தெரிவித்தார்.
 
இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து திடீரென அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. நிர்மலா தேவி விவகாரத்தில் எந்த வழியிலும் உண்மை வெளியே வந்துவிடக்கூடாது என கருதும் உயர் மட்டத்தில் இருக்கும் நபர்களின் தொடர் மிரட்டலால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.