1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2023 (13:32 IST)

கனடா வாழ் தமிழர்களை அழைத்து வருவது குறித்து அரசு ஆலோசனை

st  George port-tamilnadu
காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே உறவுநிலை விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு என்.ஐ.ஏ-வால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் அமைப்பான கேடிஎஃப் தலைவரான நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் இந்திய தூதருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவரை கனடாவை விட்டு வெளியேற்றியுள்ளது. இந்த சம்பவம்  கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து கனடாவின் தூதர் வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே அசௌகர்யமான சூழல் நிலவுவதால், கனடா – இந்தியா இடையேயான விசா சேவைகளை நிறுத்தி வைக்குமாறு விசா நிறுவனங்களுக்கு இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனடா வாழ் தமிழர்கள்  யாரும் இதுவரை தமிழக அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை என  தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:

‘’கனடா நாட்டு  நிலவரம் பற்றி இந்திய தூதரகம் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் உதவி செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது. கனடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் விரைவில் அரிவிக்கப்பட உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

மேலும், கனடா விவகாரம் பற்றி வெளிநாடு தமிழர் நலத்துறை அமைச்சார் செஞ்சி மஸ்தான் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளதாகவும், கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது.