போர்கொடி தூக்கிய அதிமுக: போர்களமான திரையரங்குகள்
முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாக இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியை சேர்ந்த பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவினர் போர்க்கொடி தூக்கி, தமிழகம் முழுக்க படத்திற்கு எதிராக போராட துவங்கியுள்ளனர்.
முதலில் மதுரையில் சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக போராட்டம் துவங்கியது. அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் சர்காருக்கு எதிராக கோவையிலும் போராட்டம் நடக்கிறது. கோவையில் சாந்தி தியேட்டரில் போஸ்டர்களை கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
திருச்சியில் சர்கார் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள 7 திரையரங்குகளுக்கு காவல்துறையினர் முன்கூட்டியே பாதுகாப்பு அளிக்க துவங்கி உள்ளனர்.
அடுத்து சர்கார் படத்தை யாரையும் பார்க்க விடாத அளவிற்கு அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, சர்கார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் அனைத்தும் பாதுகாப்பற்ற நிலையை கொண்டுள்ளது.