கமல்ஹாசன் ஒழுங்காக வரி கட்டியுள்ளாரா? - அமைச்சர் வேலுமணி மிரட்டல்
தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாக கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக பல அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீப காலாமக நடிகர் கமல்ஹாசன் குறித்து ஏராளமான சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதோடு, அவரை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் போராட்டம் நடத்தினர். போலீசாரிடம் புகாரும் அளித்தனர். அந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் அன்பழகன் கமல்ஹாசனை ஒருமையில் பேசினார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கமல்ஹாசனை மிரட்டி தொனியில் பேசினார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் இருந்தால் அதை கமல்ஹாசன் நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அப்படி கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூரினார். மேலும், “அவர் தன்னுடைய படங்களுக்கு முறையாக வரி செலுத்தியுள்ளாரா என்பதை ஆய்வு செய்யட்டுமா?” என மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பிய அவர், தமிழ் திரைத்துறைக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது எனக் கூறினார்.
நான் இதுவரை ஒரு ரூபாய் கூட வருமான வரி பாக்கி வைத்ததில்லை என நடிகர் கமல்ஹாசன் பல வருடங்களாய் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.