1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (11:55 IST)

விஜயபாஸ்கர் வாயை திறந்தால்? - அச்சத்தில் அதிமுக அமைச்சர்கள்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை சில முக்கிய அமைச்சர்களை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.


 

 
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அந்த தொகுதி மக்களுக்கு ஏராளமான பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் கமிஷனுக்கு பல புகார்கள் வந்தன. அதனையடுத்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 55 இடங்களில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.   
 
அப்போது விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ஏராளமான ஆவணங்கள் சிக்கியது. மேலும், அவரது உறவினர் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. முக்கியமாக, ஆர்.கே.நகர் மக்களுக்கு ரூ.89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியது. 
 
அதைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், சரத்குமார் மற்றும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவகலகத்தில் கடந்த 10ம் தேதி ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று சரத்குமார் வீடு மற்றும் அவரின் மனைவி ராதிகாவின் ராடான் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.
 
இதில் முக்கியமாக ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, தினகரனின் சின்னமான தொப்பி சின்னத்தில் வாக்களிக்கும் அசைன்மெண்ட் சில முக்கிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததும், அவர்கள் வழியாகவே பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதும், எல்லோருக்கும் பணத்தை பிரித்துக் கொடுக்கும் வேலையை விஜய பாஸ்கர் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
 
இந்நிலையில், சில ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார் விஜயபாஸ்கர். இன்னும் ஓரிரு நாளில் அவர் மீண்டும் வருமான வரித்துறையினரிடம் ஆஜராவார் எனத் தெரிகிறது. எனவே, ரூ.89 கோடி பணம் யார் கொடுத்தது? அப்பணம் எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு விஜயபாஸ்கர் உண்மை பேசினால், பல அமைச்சர்கள் இதில் சிக்குவார்கள் எனத் தெரிகிறது. 
 
எனவே, தினகரனுக்காக பணப்படுவாடா செய்த அமைச்சர்கள் பலரும் கலக்கத்தில் இருப்பதாகவும், அவர்களை அமைதிப்படுத்தும் வேலையில் தினகரன் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றது.