கலைகிறதா அதிமுக?? உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் ரிபோர்ட்!
உளவுத்துறை கொடுத்த சீக்ரெட் ரிபோர்ட்டால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவால் அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் குறைய அதிக வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அதிமுக தலைமைக்கு ரிபோர்ட் கொடுத்துள்ளதாம். இதனால், அதிமுகவில் சிலர் பாஜவுடன் கூட்டணி வேண்டாம் என போர்கொடி தூக்கியுள்ளதாக நெருங்கிய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
அதோடு, 2017 நிலவரப்படி இந்தியாவின் மொத்த பரப்பளவில் 71 % பாஜக மாநில ஆட்சியில் இருந்தது. ஆனால் இப்போது அந்த சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. அதாவது தற்போது 34 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வியை கண்டுள்ளது. தற்போது ஜார்கண்டிலும் தோல்வியை கண்டுள்ளது. இதனால் பாஜகவின் சாம்ராஜ்யம் சரிந்து வரும் நிலையில் கூட்டணியை தொடர வேண்டுமா என கட்சிக்குள் கேள்விகள் எழுந்துள்ளதாம்.
முக்கியமாக தற்போது குடியுரிமை சட்ட திருத்தத்தால் தமிழகத்தில் அதிமுக தரப்பினர் மீது கடும் அதிருப்தி இருந்து வரும் நிலையில் இப்போது கட்சிக்குள்ளேயே ஒரு சாரார் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என எண்ணுவது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திவிடுமோ என மேலும் தலைமைக்கு சிக்கலை கொடுத்துள்ளதாம்.