புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (08:44 IST)

பாஜக, தேமுதிக அளவுக்கு கூட அதிமுகவில் இல்லை!? – அதிமுக எம்.எல்.ஏ வருத்தம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் மற்ற கட்சிகள் அளவிற்கு அதிமுகவில் ஒரு பலம் இல்லை என அதிமுக எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில் தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் முழுமூச்சாக ஈடுபட தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியான அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளில் தீவிரமாய் உள்ளது. சமீபத்தில் அதிமுக உள் அமைப்பில் மாவட்டங்களை பிரிப்பது, புதிய பதவிகளை ஏற்படுத்துவது என பல மாற்றங்களை செய்து வருகிறது.

இந்நிலையில் அதிமுகவின் எம்.ஜி.ஆர் இளைஞர் பாசறை, அதிமுக இளைஞரணி மற்றும் ஜெயலலிதா பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் கீழ் அதிக உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு தலைமையிலிருந்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை ஆவூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் இளைஞரணி, ஜெயலலிதா பேரவை அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்றது. அப்போது பேசிய எம்.எல்.ஏ மோகன் ”தமிழகத்தில் பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளில் உள்ள இளைஞர்களை விட அதிமுகவில் இளைஞர்கள் குறைவாகவே உள்ளனர்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா காலத்தில் அதிகமாக இருந்த இளைஞர்கள் தற்போது அதிமுகவில் குறைந்து விட்டதாக கூறிய அவர் இளைஞர்களிடையே அதிமுகவை கொண்டு செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.