ரத்தத்தின் ரத்தமே புதிய செயலி(App) –தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி

Last Modified புதன், 17 அக்டோபர் 2018 (13:39 IST)
இரத்த தானம் செய்வோர் மற்றும் ரத்தம் பெறுவோர் ஆகிய இருவரையும் இணைக்கும் விதத்தில் ரத்தத்தின் ரத்தமே என்ற புதிய செயலியை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது.

விபத்து மற்றும் சில அறுவை சிகிச்சைகளின் போது தேவைப்படும் ரத்தம் கிடைக்காமல் இருத்தல் மற்றும் கால தாமதம் போன்றவற்றை தடுத்து உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்க வழிசெய்யும் வகையில் உருவாகியுள்ள ரத்தத்தின் ரத்தமே என்ற செயலியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த செயலியில் ரத்த தானம் செய்ய விரும்புவோர் மற்றும் ரத்தம் பெற விரும்புவோர் தங்கள் பெயர், முகவரரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.

பின்பு அவசரமாக ரத்தம் தேவைப்படும்போது இந்த செயலியில் தேவைப்படும் ரத்தம் மற்றும் இடம் ஆகியவற்றைப் பதியும் போது அடுத்த சில வினாடிகளில் தேவைப்படும் ரத்தத்தை உடைய பயனாளியின் இடத்திலிருந்து அதிகபட்சம் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உறுப்பினர்களின் முகவரி மற்றும் தகவல்கள் அனுப்பப்படும். தேவைக்கேற்ப ஒருவரிடமோ அல்லது பலரிடமோ ரத்தம் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த செயலி உலகளாவிய ரத்தக் கொடையாளிகள் மற்றும் ரத்தத் தேவையாளர்கள் இடையில் ஒரு பாலமாக திகழும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை Google play-ல் RR-Blood AIADMK என்ற பெயரில் தேடி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :