டெபாசிட் இழந்த மகள், தோல்வி அடைந்த மகன்: முன்னாள் அதிமுக அமைச்சரின் சோகம்
முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர்ராஜாவின் மகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்த நிலையில் தற்போது அவரது மகனும் தோல்வி அடைந்த செய்தி அவரது தரப்பிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதபியா, ராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்காக அன்வர்ராஜா தீவிர பிரச்சாரம் செய்தும் ராவியத்துல் அதபியா தோல்வியடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டும் இழந்தார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி 1,343 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 4,505 வாக்குகளில் ராவியத்துல் அதபியா 1,062 வாக்குகளும், சுப்புலெட்சுமி 2,405 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மகள் டெபாசிட் இழந்த சோகத்தில் இருக்கும் அன்வர் ராஜாவுக்கு தற்போது அவரது மகன் நாசர் அலியும் தோல்வி அடைந்த செய்தி வெளிவந்துள்ளது. நாசர் அலி மண்டபம் ஒன்றிய உறுப்பினர் 6-வது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். முன்னாள் அதிமுக அமைச்சரின் மகள், மகன் இருவரும் தோல்வி அடைந்துள்ளது அவருக்கு மட்டுமின்றி அதிமுகவுக்கும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.