எல்லா மேயர் பதவிகளும் எங்களுக்கே! – கூட்டணி கட்சிகளுக்கு அல்வா கொடுத்த அதிமுக!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (10:53 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்து கொண்டிருக்கும் நேரத்தில் கட்சிகளுக்குள் பதவி பங்கீட்டில் சச்சரவு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கியவுடனே அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்கின. தங்கள் கூட்டணி கட்சிகளிடம் எத்தனை கவுன்சிலர் சீட்டுகள் கேட்கலாம் என்பதை விட எத்தனை மேயர் பதவிகளை கேட்கலாம் என்பதிலேயே பெரும்பாலும் சிறிய கட்சிகள் ஆர்வம் காட்டின.

அதிமுக கூட்டணியில் இருக்கும் சரத்குமார் கூட தங்களது கட்சிக்கு மூன்று மேயர் பதவிகள் கேட்க போவதாக கூறியிருந்தார். அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் மேயர் சீட்டுகளுக்காக அதிமுகவிடம் நைச்சியமாக பேசி வந்ததாக தெரிகிறது.

திமுக பக்கம் சென்னை உள்ளிட்ட மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு உதயநிதி உள்ளிட்டவர்களை களமிறக்க திட்டமிட்டிருந்தனர். இதனால் நேரடி தேர்தல் நடத்துவது பல விதங்களில் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலேயே மறைமுக தேர்தலாக மாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் மறைமுக தேர்தலிலும் மேயராக தேர்வாக வேண்டுமானால் அந்த கட்சிகளுக்கு அதிகளவில் கவுன்சிலர்கள் தேவை. ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கையிலும் கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காதவாறே சீட்டுகளை வழங்க திட்டமிட்டு வருகிறதாம்.

அதிமுகவின் இந்த மறைமுக தேர்தல் திட்டம் கூட்டணி கட்சிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருப்பதால் மறைமுகமாக அதிமுகவை பல இடங்களில் விமர்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.இதில் மேலும் படிக்கவும் :