செம்பரம்பாக்கத்திலிருந்து 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகள் மழைநீரில் மூழ்கியுள்ள நிலையில், ஏரிகளும் முழுவதும் நிரம்பியுள்ளன. இதனால் இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது 6 மணி முதல் நீர் திறப்பை 5 ஆயிரம் அடியாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றங்கரை பகுதிகளான கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், திருமுடிவாக்கம், ஆதனூர், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட 20 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.