தமிழக மக்களை முட்டாள் என நினைக்கிறீர்களா? - கொந்தளிக்கும் நடிகை
தமிழக முதல்வராக சசிகலா நியமிக்கப்பட்டால், அவருக்கு எதிராக மக்கள் நிற்க வேண்டும் என நடிகை ரஞ்சனி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவை, அடுத்த முதல்வராக அமர வைக்க அவரின் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சசிகலா முதல்வராக அமர வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும், தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பினார். ஆனால், பல்வேறு தரப்பினரிடமிருந்தும் சசிகலாவிற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில், முதல் மரியாதை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரஞ்சனி தன்னுடைய முகநூல் பக்கத்தில் சசிகலாவிற்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
நான் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கிறேன். தமிழகத்தின் முதல் அமைச்சராக சசிகலாவை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஜெயலலிதாவிற்கு வேலைக்காரியாக இருந்ததை தவிர சசிகலாவிற்கு வேறு என்ன தகுதி இருக்கிறது? மன்னார் குடி மாபியா கும்பல், தமிழக மக்களை முட்டாள்கள் என நினைக்கிறதா?.
தமிழக மக்கள் சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் போராடியதை இந்த உலகம் பார்த்தது. தற்போது சசிகலாவிற்கு எதிராக மக்கள் போராடுவதை பார்க்க வேண்டும். மக்கள் சக்தியை பயன்படுத்த வேண்டும். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின், அதிமுக கட்சியை ஜெயலலிதா திறம்பட வழி நடத்தினார். குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள சசிகலா, முதல்வராவதற்கு மக்கள் தடுத்து தமிழகத்தையும், அதிமுகவையும் காப்பாற்ற வேண்டும்.
முதல்வராக வர வேண்டிய தகுதி சசிகலாவிற்கு இல்லை. மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்ட போது, சசிகலா எப்படி எல்லோரையும் ஏமாற்றி, நாடகம் ஆடினார் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இதில் தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.